தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருக்கும் வைகை அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என 5 மாவட்டங்கல் விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக விளங்கி வருகிறது. சுமார் 71 அடி உயரம் கொண்ட இந்த வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை இல்லாததால் அணையின் நீர் இருப்பு குறைந்துள்ளது.
அதனால் சில ஆண்டுகளாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு பெய்த தொடர் பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்ற அரசு மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் போகம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுளள்து.
இதனை கூட்டுறவு துறை அமைச்சர் இ. பெரியசாமி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மற்றும் மதுரைமாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு அணையின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். மேலும் திமுக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.