திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர்.
திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த 7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த பிரபாகரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழழகன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் தனது மற்ற இரண்டு நண்பர்கள் மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் மணிகண்டன் ஒழுங்காக கத்தியை பிடித்து வெட்ட கூட தெரியவில்லை என்று கிண்டலாக தமிழழகனை பார்த்து கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தமிழழகன் மணிகண்டனை கத்தியால் வெட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஜெகன், மணிகண்டன், காக்கா கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழழகனை அங்கிருந்த கட்டையால் பலமாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த தமிழழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மூவரும் சேர்ந்து அவரது உடலை அரியமங்கலத்தில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர்.

இதையடுத்து தமிழழகனை காணவில்லை என போலீசார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவரது நண்பரான கார்த்திக் போலீசாரிடம் சிக்கினார். அவரைப் பிடித்து விசாரித்ததில் முன் நடந்தவற்றை அனைத்தையும் வாக்குமூலமாக அளித்தார் அதன்படி உண்மைகள் அனைத்தும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பியோடிய ஆட்டோ ஜெகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.