பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராம்குமார், அங்கிதா இருவரும் போராடி வெற்றி பெற்றனர் .
பாரிஸ் நகரில் நடக்க உள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ,அமெரிக்க வீரரான மைக்கேல் மோவை எதிர்கொண்டார் . இதில் முதல் செட்டில் தவறவிட்ட ராம்குமார், 2வது செட்டிலும் பின் தங்கி இருந்தார். பின் சுதாரித்துக் கொண்ட அவர் டை பிரேக்கர் வரை போராடி 2 வது செட்டை தன் வசப்படுத்தினார்.
இறுதியாக 2-6, 7-6 (7-4),6-3 என்ற செட் கணக்கில் ,ராம்குமார் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டி 1 மணி 54 நிமிடங்கள் வரை நடைபெற்றது. மற்றொரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ,ஜெர்மனி வீரரான ஆஸ்கர் ஓட்டியிடம் 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியுற்று ஏமாற்றம்அளித்தார். இதற்கு முன் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 182 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஆஸ்திரேலிய வீராங்கனை அரினா ரோடியானோவுடன் மோதினார் .இதில் 3-6, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போராடி அங்கிதா வெற்றி பெற்றார்.