ஜவுளிக் கடை மேலாளரிடம் ரூபாய் 49000 பெற்று ஏ.டி.எம் மையத்தில் செலுத்துவது போன்று ஏமாற்றிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கடைக்கு சொந்தமான 49000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அதிகமான கூட்டம் இருந்ததால் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு ஒரு பெண் நின்று கொண்டு “நான் பணம் போடுவதற்கு உதவி செய்கிறேன்” என்று கூறி நாகராஜிடம் இருந்து 49௦௦௦ ரூபாய் பணத்தை வாங்கி அதனை எந்திரத்தில் போடுவது போல் நாடகமாடி பணம் செலுத்தும் முறையை முழுமையாக பூர்த்தி செய்யாமல் பாதியிலேயே விட்டுவிட்டு பணம் வங்கியில் செலுத்தப்பட்டது என நாகராஜிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பி நாகராஜ் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் வங்கி கணக்கில் பணம் ஏறாததால் கடையின் உரிமையாளர் நாகராஜிடம் கேட்டபோது இதுபற்றிய விவரத்தை அவர் வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் அந்தப் பெண் பணத்தை போடுவது போல் நாடகமாடி நாகராஜ் சென்றதும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனால் நாகராஜ் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்தப் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் கொண்டமநாயக்கன்பட்டியைச் சார்ந்த மணிமேகலை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்து இருப்பதும் மதுரை மாவட்டத்தில் இது போன்ற வழக்குகளில் அவர் ஏற்கனவே சிக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.