கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டு அரசு “வைரஸ் பாஸ்” திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக “வைரஸ் பாஸ்” என்னும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த திட்டதின் படி பிரான்ஸ் நாட்டு மக்கள் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காட்டினால் மட்டுமே நீண்ட தூரம் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என அறிவித்துள்ளது. மேலும் உணவகங்கள் மற்றும் காபி ஷாப்பிலும் இந்த பாஸ்ஸை காட்டிய பின்தான் மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த”வைரஸ் பாஸ்” திட்டமானது மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள தூண்டும் என நம்பப்படுகிறது. மேலும் ஒருவர் இந்த பாஸ்ஸை பெறுவதற்கு, அவர்கள் கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபகாலத்தில் கொரோனா தொற்று பாதித்து அதிலிருந்து மீண்டு வந்ததற்கான மருத்துவ சான்றிதலோ வைரஸ் பரிசோதனை செய்ததில் எதிர்மறையான முடிவு கிடைத்த படிவமோ இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் 36 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.