தந்தை செல்போன் வாங்கித் தராததால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வெட்டவளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் என்பவரது மகன் பரத். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தை ரத்தினவேலிடம் தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ரத்தினவேல் கூலித்தொழில் செய்து வருவதால் தனது சூழலை மகனிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் அதனைப் புரிந்து கொள்ளாத பரத் தந்தைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பரத் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனிடையே இரவு 9 மணி அளவில் உறவினர் மொபைல் எண்ணுக்கு புகைப்படம் ஒன்று வந்தது. அதில் பரத்தின் கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பது போல் இருந்தது. மேலும் ரத்தினவேல்க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் 5 லட்சம் கொடுத்தால் மட்டுமே தங்கள் மகனை விடுவதாகவும் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் மற்றும் உறவினர்கள் பரத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப்-ல் இருந்ததால் வெட்டவளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரத்தினவேல். புகாரை தொடர்ந்து பரத்தின் செல்போன் என்னை வைத்து தேடியதில் அவரது செல்போன் மலைகோவில் அருகே இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அரசுப் பள்ளியின் அருகே தனியாக நின்ற பரத்தை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க தொடங்கினர்.
அப்போது பரத் தன்னை கண்ணைக் கட்டி சிலர் கடத்தியதாக கூறியுள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்கையில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளி வந்துள்ளது. ரத்தினவேல் புதிய மொபைல் வாங்கிக் கொடுக்காததால் தனது சித்தி மகனுடன் சேர்ந்து திட்டம் போட்டு கடத்தல் நாடகம் ஆடியதாக பரத் ஒப்புக் கொண்டுள்ளான். மாலை வீட்டில் இருந்து சித்தி மகனுடன் மலைக் கோவிலுக்கு சென்ற பரத், அங்கு தனது கை கால்களை கட்டி போட்டு புகைப்படம் எடுத்து தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உறவினர்கள் பரத்தை தேடி அலைந்தபோது அவரது சித்தி மகனும் உடன் தேடுவது போல் நாடகமாடி உள்ளார். அதோடு வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் பரத்திற்கு தெரிவிக்க தவறவில்லை. ஆனால் போலீஸ் தன்னைப் பிடித்து விடும் என்ற பயத்தில் பரத் வீட்டிற்கு திரும்பிய போது காவல்துறையினரின் கண்ணில் தென்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.