நியூயார்க்கில் தனது மூன்று வயது மகனுக்காக தந்தை ஒருவர் கட்டிய கோட்டைகள் தற்போது சுற்றுலாத்தலமாக பிரபலமாகி வருகிறது.
நியூயார்க்கில் உள்ள லேக் ஜார்ஜின் அருகே பிரம்மாண்டமான மூன்று கோட்டைகள் ரம்மியமான காடுகளில் மறைந்துள்ளது. இந்த மூன்று கோட்டைகளும் தற்போது சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்பட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது கடந்த 1978-ஆம் ஆண்டில் தனது மனைவியிடம் விவாகரத்து வாங்கிய நபர் ஒருவர் தனது மூன்று வயது மகனிடம் “ஒரு நாள் உனக்கு பிரம்மாண்டமான கோட்டை ஒன்றை கட்டி தருவேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது மூன்று கோட்டைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
அந்த மூன்று கோட்டைகளும் அனைத்து வசதிகளுடனும் ஆடம்பரமாக பிரைவேட் எஸ்டேட் ஒன்றில் மாளிகை போல் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த கோட்டைகளின் உரிமையாளரான ஜான் லாவெண்டர் கடந்த 1982-ஆம் ஆண்டு கோட்டைகள் கட்டப்பட்டிருக்கும் பிரைவேட் எஸ்டேட்-ஐ வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாவெண்டர் தனது விவாகரத்துக்கு பிறகு மூன்று வயது மகனுடன் நியூயார்க் நகரில் ஐந்து நபர்கள் உடன் வீட்டை பகிர்ந்து வசித்து வந்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து தனது மூன்று வயது மகனிடம் இது நம்முடைய வீடு இல்லை என்றும் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விரைவில் ஒரு வீட்டை கட்டுவோம் என்றும் கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு எஸ்டேட்டை வாங்கி அதில் விருந்தினர்கள் வந்தால் சவுகரியமாக உணர்வதற்கும், தன் மகனுடன் வசதியாக வாழ்வதற்கும் ஏற்றவாறு ஒரு பிரம்மாண்டமான வீட்டினை கட்ட வேண்டும் என்று நினைத்துள்ளார்.
பின்னர் அந்த மாளிகை 30 வருடங்களுக்கு மேல் பிரைவேட் வசிப்பிடமாக இருந்துள்ளது. ஆனால் லாவெண்டருக்கு திடீரென ஏற்பட்ட விபத்துக்கு பின்னர் அந்த மாளிகையை தங்குமிடமாக அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது லாவெண்டர் பல வருடங்களாக மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த நிலையில் ஒரு சொகுசு தளம் போல் தன்னுடைய கோட்டைகளை மாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து லாவெண்டர் அந்த பிரம்மாண்டமான கோட்டைகளில் 2010-ஆம் ஆண்டிலிருந்து வெளி ஆட்கள் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.