மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மீது ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் மலேசியாவின் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் பல ஆயிரம் கோடி மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவானது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டில் நஜீப்-க்கு அபராதமும், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. பின்னர் நஜீப் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அந்த மனு விசாரணை முடிவுக்கு வந்ததோடு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதில் நஜீப்-ன் மனு நிராகரிக்கப்பட்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதியாகியுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் நஜீப் தற்போது அபராதமும், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க உள்ளார். இருப்பினும் நஜீப் தரப்பு வக்கீல்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.