தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் எலக்ட்ரிக்கல் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மின்சார காரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார கார்கள் பயன்படுத்த சார்ஜர் நிலையங்கள் அமைக்கப்படும் பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 350 முதல் 400 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பயணமாக வாகன ஓட்டிகளுக்கு அமையும் என்றும் மின்சார சார்ஜர் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் அதிகமாக பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்யும் நிலை மக்களுக்கு வராது எனவும், அடுத்த ஐந்து வருடங்கள் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 16 எலெக்ட்ரிக் சார்ஜர் நிலையங்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.