இந்தியாவிலும் முதன்முறையாக திடீரென மர்மத்தூண் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்திலும் உலகின் முதல் முறையாக மர்மத்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த மர்மத்தூண் சில நாட்களில் மர்மமாக மறைந்து போனது. இதையடுத்து ரோமெனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 30 நகரங்களில் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மர்மமான முறையில் மறைந்து வந்தது. அந்தவகையில் இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றி மர்மத்தூண் தோன்றியுள்ளது. உலோகத்தால் ஆன இந்த தூண் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டுள்ளது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தோன்றியது இதுவே முதல்முறை ஆகும். அகமதாபாத்தில் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் காணப்பட்ட இந்த தூண் உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஆனால் அதன் அடிவாரத்தில் குழி தோண்டியதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியவில்லை.
இதையடுத்து அந்த மர்மதூண் மக்களிடையே ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் பெருமளவில் பூங்காவிற்கு படையெடுத்து வந்த மக்கள் அதன் அருகே நின்று செல்பிகள் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இந்த உலோகத்தூணை தனியார் நிறுவனமொன்று நிறுவியுள்ளது என்பது தெரியவந்ததால், பிற நாட்டில் நிலவிய மர்மம் இங்கு நீடிக்கவில்லை. இது பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.