Categories
மாநில செய்திகள்

ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் – உருவானது எப்படி? முழு தகவல்…!!

காவல்துறையினருக்கும் உதவிகரமாக இருந்து தற்போது பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பற்றிய தொகுப்பு

சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன அவர்களின் பணி என்ன என்பது குறித்த செய்தி தொகுப்பு. காவல் துறையோடு இணைந்து மக்களுக்காக சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை தேர்வு செய்து உருவாக்கப்பட்டது தான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு. 1993 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்போதைய காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதிப் வி பிலிப் முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் இந்த அமைப்பு. காவல்துறையினரை பொதுமக்கள் நேரடியாக அணுகுவதில் இருந்த பயத்தை போக்கி காவலர்களுக்கு மக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த உருவாக்கப்பட்டது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு.

பொது மக்களில் ஒருவராக இருந்துகொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் காவலர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதே இந்த அமைப்பு.ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் செயல்பாடுகள் திருப்தி அளித்தது 1994 ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த அமைப்பை தமிழகமெங்கும் விரிவு படுத்தினார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசப்படவே பல்வேறு விருதுகளும் இந்த அமைப்புக்கு கிடைத்தன. இதனால் எந்தவித ஊதியமும் இன்று தன்னார்வலர்களால் செயல்பட ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தேர்வு செய்யப்படும் இவர்கள் அந்தந்த பகுதிகளில் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கினர்.

இந்த அமைப்புக்கு என சட்ட அங்கீகாரம், பணிவரன்முறை, சீருடை, ஊதியம் எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க தன் ஆர்வத்தின் அடிப்படையிலேயே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக பணியாற்ற முடியும். குற்றம் நடக்கும் இடங்களுக்கு சென்று அது தொடர்பான தகவல்களை திரட்டிக் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடவேண்டும் என்பதே உத்தரவாக இருந்தது. ஆனால் நாளடைவில் வாகன தணிக்கை, காவல் நிலைய பணிகள் உள்ளிட்டவற்றில் இவர்கள் ஈடுபட்டனர். பல ஊர்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இருந்தவர்கள் கையில் லத்திகளுடன் வலம் வந்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.

காவல்துறையினரின் வேலையை குறைக்கும் வகையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு முன்னின்று செயல்படத் தொடங்கினர். இதன் விளைவாக தாங்களும் ஒரு காவலர் என்ற மனப்போக்குடன் அவர்கள் செயல்படத் தொடங்கியதன் விளைவே இப்போது சாத்தான்குளம் சம்பவத்திலும் எதிரொலித்து இருக்கிறது. ஜெயராஜ் பென்னிக்ஸ் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸில் இருப்பவர்களும் உடந்தையாக இருப்பதாக வெளியான தகவல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சேவை நோக்கில் செயல்பட உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று பல்வேறு சர்ச்சைகளை எதிர் கொண்டிருக்கிறது.

Categories

Tech |