பனிப்பாறை உருகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள், நீர்மின் திட்ட கட்டமைப்புகள் போன்றவை முழுமையாக அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த வெள்ளத்தால் நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் போயினர்.
அதோடு நீர்மின் நிலைய சுரங்கமானது வெள்ளத்தில் மூழ்கியதால் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் போன்றோர் இணைந்து தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ரைனி கிராமத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் தபோவன் சுரங்கத்திலிருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு ஆக மொத்தம் இந்த வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துவிட்டது. மேலும் இந்த வெள்ளத்தால் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காணாமல் போனதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.