தமிழகம் முழுவதிலும் இன்று டிராக்டர் மற்றும் பைக்கில் பேரணி நடத்த தடை விதித்து தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று டிராக்டர் மற்றும் சைக்கிள் பேரணி நடத்த தடை விதித்து தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் வாகனங்களில் பேரணி நடத்த கூடாது. மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.