காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உதகை அருகே உள்ள கூக்கல்தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொய்மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சில விவசாயிகள் கார்னேசன் என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள் என பல வண்ணங்களில் பூக்கும் இந்த மலர்கள் மேடைகளை அலங்கரிக்கவும், பொக்கேகளை தயாரிக்கவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ரோஜா மலர்களின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், சந்தைகளில் போதிய அளவு ரோஜா மலர்கள் கிடைப்பதில்லை என்பதனாலும்; அதற்குப் பதிலாக கார்னேசன் மலர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால், சந்தையில் கார்னேசன் மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யபடும் கார்னேசன் மலர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் கார்னேசன் மலர்கள் பெங்களூரு, கொச்சின், மும்பை, டெல்லி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பும் பணி சூடுபிடித்துள்ளது.