ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து வருவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், அவர்களை மீட்கக்கோரி தமிழக முதல்வர் 2வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் 650 பேர் உட்பட சுமார் 1,000 பேர் ஈரானில் சிக்கி தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் இன்றி அவர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது மீண்டும் அதனை நினைவு படுத்தும் வகையில் இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.
எனவே ஈரானில் சிக்கியுள்ள அனைத்து மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். அதேபோல, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்யவேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மீனவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.