இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், முனிசாமி போன்ற 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சிறைபிடித்து சென்றனர்.
எனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து இலங்கை அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்களை விடுவித்தனர். அதன் பின் விடுதலை செய்யப்பட்ட அந்த 40 மீனவர்களும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை இணை இயக்குனர் இளங்கோ மற்றும் துணை இயக்குனர் ஜூலியஸ் போன்ற அதிகாரிகள் வரவேற்று, அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் கூறும்போது, இலங்கை கடற்படையினர் இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அத்துமீறி கைது செய்தனர் என கூறியுள்ளார். இதனையடுத்து இலங்கை அரசிடம் பிடிபட்ட சுமார் 250 படகுகளை மத்திய மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு தங்களை விடுதலை செய்வதற்காக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.