சூறாவளி காற்று வீசும் என்பதால் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியா பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். எனவே, அந்தமான் நிக்கோபார் பகுதியில் வரும் 16ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் 40℃ வெப்பநிலை பதிவாகும்:
இதுதவிர, தமிழகத்தில் திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவித்துள்ளது. எனவே, அடுத்து வரும் இரு தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.