Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு… எங்களுக்கு அது ரொம்ப முக்கியம்… கோரிக்கை விடுத்த மீனவர்கள்…!!

தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதிக அளவில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள கடற்கரையோரம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையானது சூளேரிகாட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு கடல்நீர் கொண்டுவருவதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக பெரிய பாறாங்கற்கள்  கொட்டப்பட்டுள்ளன. அங்கு கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக கொட்டப்பட்ட இந்த கற்களால் அதன் பக்கத்தில் இருக்கும் நெம்மேலி குப்பம் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து 50 மீட்டர் தூரத்திற்கு கடல் முன்னோக்கி வந்து விட்டதால் கடல் நீரால் மணல் பரப்பு முழுவதும் அரித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமத்தில் உள்ளனர்.

மேலும் ராட்சச அலையானது அங்குள்ள சிமெண்ட் சாலை வரை வந்து செல்வதால் 100 மீட்டர் நீளமுள்ள சிமெண்ட் சாலை சேதமடைந்து விட்டது. அங்கு கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 20 மீட்டர் தூரத்திற்கு மணல்திட்டு உருவாகி உள்ளது. இதனால் கடற்கரையோரம் அமைந்துள்ள அம்மன் கோவில் ஒன்று இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் தமிழக அரசுக்கும், மீன்வளத்துறைக்கும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் நெம்மேலி குப்பம் கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீண்டும் தமிழக அரசிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |