இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமானது கோவா. கொரோனாவால் பாதித்த கடைசி நபரும் தற்போது குணமடைந்துள்ளார். கோவாவில் இதுவரை பாதிக்கப்பட்ட 7 பேரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இது ஏப்ரல் 3 முதல் கொரோனா வைரஸ் பதிவாகாத நாட்டின் முதல் பசுமை மாநிலமாக கோவா திகழ்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. அதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோவாவில் கொரோனா பாதித்த கடைசி நபரும் குணமடைந்தார்.
இது தொடர்பாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது, கோவாவில் 800க்கு மேற்பட்டவர்களிடம் கொரோனா சோதனை நடத்தினோம். அவர்களில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 6 பேர் வெளிநாடு பயணங்களை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து கோவாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
ஏப்ரல் 20 முதல், அரசாங்கம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் வீட்டுக்கு வீடு குடிமக்கள் கணக்கெடுப்பின் அறிக்கைகளை ஆராய்ந்து, தேவையான இடங்களில் COVID-19 க்கு மக்களை சோதிப்பது குறித்து முடிவு செய்யும் என்று முதல்வர் கூறினார். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டதால் கோவாவை ” ஜீரோ கொரோனா வைரஸ்” மாநிலமாக அழைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். தற்போது குணமடைந்த 7 பேரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.