Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் வீசி, ஒரு விக்கெட்டும் எடுக்காத பும்ரா!

முதல்நிலை பந்துவீச்சாளரான இந்தியாவின் பும்ரா, கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.

தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இவர், இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டி20 தொடர் மூலம், மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார்.

26 வயதான இவர், அனைத்து விதமான போட்டிகளில் பிற அணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். ஆனால், சமீப நாட்களாக ஒருநாள் போட்டிகளில், அவரது பந்துவீச்சு எடுபடாமல் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனதற்கு பும்ராவின் ஃபார்ம் அவுட்டும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Bumrah

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய அவரால், மூன்று ஒருநாள் போட்டிகளில் 30 ஓவர்களை வீசி 164 ரன்களை வழங்கி, ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் இருக்க நேர்ந்தது. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்து முடிந்த, மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றாமல் 38 ரன்களை வழங்கினார்.

இதன்மூலம், கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் (40 ஓவர்கள்) வீசி, ரன்களை வழங்கி, அவர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தும் அவரால், கடந்த 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் இருந்ததுதான் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

Bumrah

இது தொடர்ந்துகொண்டே போனால், தரவரிசைப் பட்டியலில் பும்ரா தனது முதலிடத்தைப் பறிகொடுக்கும் சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது. சிறந்த வீரர்கள் அவ்வப்போது ஃபார்ம் அவுட் ஆவது வழக்கம்தான். அந்த ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டும் கம்பேக் தந்து, ஆகச் சிறந்த வீரர்களாக மாறியுள்ளனர். ஆனால், அதற்கு எவ்வளவு நாட்கள் அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர் என்பதுதான் விஷயமே.

ஃபார்ம் அவுட்டில் இருக்கும் பும்ரா, நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் கம்பேக் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கவுள்ளது.

Categories

Tech |