Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தவிக்கும் நாய்கள்… பசியை போக்கும் தீயணைப்பு வீரர்கள்… நெகிழவைக்கும் சம்பவம்!

பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர்.

கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் திறந்திருந்தாலும் பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியில் வர கூடாது என்பதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தெருவில் சுற்றித்திரியும் நாய்களும் உணவில்லாமல் தவிக்கிறது. மக்கள் நடமாட்டம் இருந்தால் நாய்களுக்கு ஏதாவது வழியில் உணவு கிடைக்கும்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நாய் உணவில்லாமல் தவிக்கிறது. அதே சமயம் பசியால் தவிக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு காவலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஏதாவது உணவு கொடுத்து பசியை போக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தெருநாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி தினமும் பசியை போக்கி வருகின்றனர்.

தெருநாய்களும் ஆர்வமுடனும், பாசத்துடனும் பிஸ்கட்டை சாப்பிடுகின்றன. இதன் காரணமாக தினமும் தீயணைப்படை வீரர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததுமே தெருநாய்கள் கூட்டமாக வந்து நிற்க தொடங்கி விடும். பாசத்தை காட்டும் விதமாக வாலை ஆட்டிக் கொண்டே தீயணைப்பு துறையினர் அருகில் வந்து நின்று அவர் மீது தாவி நெகிழ வைக்கிறது.

Categories

Tech |