அரசு மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு விரர்களை மக்கள் பாராட்டியுள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் சார்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்த சூழலை எவ்வாறு கையாளுவது என்றும், தீயை எப்படி கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், தீக்காயம் அடைந்தவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும், ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளது.
அதில் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்னதாக பொதுமக்கள் தங்களை எவ்வாறு தீயிலிருந்து மீட்டுக் காத்துகொள்வது என்பது குறித்து ஒத்திகை செய்துக் காண்பித்துள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினக்கு தகவல் தெரிவித்தல், தீ ஒலிப்பு அலாரம் ஒலிக்கச் செய்தல் போன்றவை குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சியில் நடத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வடிவேல், ஜேம்ஸ் அருள்பிரகாஷ் போன்றோர் அடங்கிய தீயணைப்புக்குழுவினர் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஒத்திகை செய்துக் காண்பித்துள்ளனர்.
இதனைப் பார்த்துகொண்டிருந்த மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் எழிலரசி, மருத்துவ நிலைய அதிகாரி மருத்துவர் வெங்கடேசன், மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திய தீயணைப்பு வீரர்களை பாராட்டியுள்ளனர்.