பஞ்சு மூட்டைகள் மின்கம்பி மீது உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வழியாக கும்பகோணம் நோக்கி கோவை மாவட்டத்திலிருந்து பஞ்சு கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. இந்த லாரியை கனகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் உடுமலை-பழனி நெடுஞ்சாலையில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பி பஞ்சு மூட்டைகளை உரசி விட்டது. இதனால் பஞ்சு மூட்டை திடீரென தீப்பிடித்து லாரி முழுவதும் பற்றி எரிந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுனர் உடனடியாக கீழே குதித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்தில் 2 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமாகியதாக மடத்துக்குளம் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.