அழகுசாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் 5 1/4 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஷமிமாபானு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி இவரது செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் அழகு சாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த பொருட்களை வாங்கினால் ஏற்கனவே செலுத்திய பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் இருந்துள்ளது. இதனை நம்பிய ஷமிமாபானு அந்த குறுஞ்செய்தியில் வந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அதில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு ஷமிமாபானு 8 தவணையாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 999-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியபடி அழகு சாதனப் பொருட்களை அனுப்பவில்லை. இதனை தொடர்ந்து தொடர்பு கொண்ட அந்த நபரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷமிமாபானு இந்த சம்பவம் குறித்து நாகை மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.