தன்னுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பாஜககாரருக்கு உதவிய திமுக எம்.பி செந்தில்குமாரைஅனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில்குமார். இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். சமூகவலைத்தளம் மூலம் மக்களின் குறைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தை பிரச்சனையையும் தீர்த்து வைத்துள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இதுவரை 20க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்த செந்தில்குமார், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரின் உறவினருக்கு மருத்துவ உதவி செய்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவை சேர்ந்த SG சூர்யா என்பவரின் உறவினர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை தெரிந்து கொண்ட அவர் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியின் கீழ் சிகிச்சைக்கு உதவ முன்வந்தார்.
மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரோடு பாஜக சார்பில் பலமுறை கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தவர் தான் SG சூர்யா. சமூகவலைதளங்களில் இருவருக்கும் கருத்து மோதல் இருந்து வந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் உதவி என்று தெரிந்த அடுத்த நொடியே உறவினருக்கு உதவிக்கரம் நீட்டியசெந்தில்குமாரின் எண்ணம் அனைவராலும் பாராட்டப்படுள்ளது.