குடியரசு தின அணிவகுப்பில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், மேடைக்கு சென்று அரசின் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதோடு பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்நிலையில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையில் துப்பாக்கி ஏந்தி நின்ற பெண் போலீஸ் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
இதனையடுத்து சக போலீசார் உடனடியாக அவரை மீட்டு தண்ணீர் கொடுத்தனர். அதன்பின் அங்கு வந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலையில் உணவு சாப்பிடாமல் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் பெண் போலீஸ் மயங்கி விழுந்தது தெரிவித்தனர். அதன் பின் அவருக்கு உணவு வழங்கிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலகுரு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திடீரென பெண் போலீஸ் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.