மகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் கோபத்தில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னாதவூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார். இதில் மூத்த மகன் ரசிகரன் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, திருட்டு உள்ளிட்ட பல குற்ற செயல்களிலும் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில் மேச்சேரி பகுதியில் நடந்த சைக்கிள் திருட்டு மற்றும் கோவில் உண்டியல் உடைப்பு போன்ற சட்டவிரோதமான செயல்களில் ரசிகரனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மகனின் செயலால் அதிர்ச்சி அடைந்த குமார் அவனின் எதிர்காலத்தை நினைத்து அச்சம் அடைந்தார். எனவே மகனை அழைத்து கண்டித்த போது, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த குமார் வீட்டில் இருந்த இளைய மகன் மற்றும் மனைவியை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு ரசிகரனை பலமாக தாக்கியுள்ளார். அதன்பின் மயங்கி விழுந்த ரசிகரனின் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி விட்டு வீட்டின் மேற்பகுதியில் சேலையில் தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
அப்போது மனதை கல்லாக்கிக் கொண்டு அவனை அப்படியே விட்டுவிட்டு, கதவை பூட்டி விட்டு மேச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். அதன்பின் நடந்தவை எல்லாம் இன்ஸ்பெக்டரிடம் கூறி தனது வீட்டு சாவியை ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்கும் போது ரசிகரன் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மகனின் இறப்பிற்கு காரணமான தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தனது மகன் திருட்டு சம்பவங்களில ஈடுபடுவதும், அவனைப் பிடித்து மற்றவர்கள் தாக்குவதையும் சமூக வலைத்தளங்களில் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மகனின் எதிர்காலத்தை நினைத்து வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினர் மகனின் பெயர் குறித்து அவதூறு பேசியதால் அவமானம் தாங்க முடியாமல் கோபத்தில் தனது மகனை சரமாரி தாக்கியதாகவும், வீட்டின் மேல் பகுதியில் தூக்கில் தொங்க விட்ட தாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.