ஏர் கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் இந்த கால்வாய் வழியாக ஆலங்குளம், கருவேலம்பட்டி, சூரக்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். தற்போது கனமழை பெய்தும் இந்த கண்மாயில் 60 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த 20 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூத்தியார்குண்டு மெயின் ரோட்டில் ஏர் கலப்பை மற்றும் வாழை கன்றுகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீர்ப்பிடிப்பு பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.