பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பின் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு புரவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி 90 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பின் படி, பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் இப்போதுதான் முடிவடைந்துள்ளது. ஆனால் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. அதோடு தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகவும் ஆரம்பித்து விட்டன.
இந்நிலையில் முன்பு பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் சமயத்தில், மீண்டும் மழையினால் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர். மேலும் சாகுபடி செய்யப் போகும் நிலையில் உள்ள பயிர்கள் நிலத்தில் சாய்ந்ததால் அதிக மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.