பிரபல பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.
நடிகை யுவிகா சவுத்ரி பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ஹரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூகஆர்வலர் ஒருவர் இதுபற்றி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, நடிகை யுவிகா சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து பரப்பப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்” எனவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று யுவிகா சவுத்ரியை கைது செய்தனர். பின்னர், அவர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.