பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களின் மகன்களாக இருந்தும், திரையுலகில் நீடிக்காத நடிகர்கள் பற்றி பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களாக களமிறங்கிய பலரும் வெற்றி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனினும், அவ்வாறு திரையுலகில் அறிமுகமாகும் வாரிசு நடிகர்கள் அனைவரும் ஜொலிப்பதில்லை. அந்த வகையில், வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாத நடிகர்கள் பற்றி பார்ப்போம்.
தமிழ் திரையுலகில், சந்திரமுகி உட்பட பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் பி. வாசுவின் மகன் நடிகர் சக்தி, “சின்னத்தம்பி” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு, “தொட்டால் பூ மலரும்” என்னும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.
எனினும், அதன் பிறகு அவரால் திரையுலகில் நீடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அவரின் மதுப்பழக்கம் தான் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தது, பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷிற்கு கிடைக்காத பெயர், புகழ் இல்லை. அந்த அளவிற்கு உச்ச நடிகராகத் திகழ்ந்த அவரின் புகழில் சிறிதளவு கூட அவரின் மகன் ஆனந்த் குமாருக்கு கிடைக்கவில்லை.
பல திரைப்படங்களில் துணை நடிகராக தான் நடித்திருக்கிறார். இதற்கு காரணம் அவர், மதுவுக்கு அடிமையானது தான் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவரின் “தாஜ்மஹால்” திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தது.
அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் வெளியான, “மாநாடு” திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரும் மதுப்பழக்கம் காரணமாகத் தான், ஜொலிக்காமல் போனதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் நவரச நாயகனாக ஒரு காலகட்டத்தில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் கார்த்திக்கின் மகன், கௌதம் கார்த்திக்.
இவர், “கடல்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், அதன் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. அடுத்ததாக பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹர்ஷவர்தன், சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார்.
அதிலும், “புன்னகை தேசம்” திரைப்படம் மட்டும் தான் அவருக்கு நல்ல படமாக இருந்தது. இத்திரைப்படத்திலும் அவர் துணை நடிகராகத் தான் நடித்திருந்தார். இவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. தந்தை யாராக இருந்தாலும், நாம் திறமையுடன் உழைத்தால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும் என்பது, இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது.