குடிநீர் வினியோகிக்க படாததால் காலி குடங்களுடன் சாலைக்கு வந்த பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீரானது ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் நகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் எம்ஜிஆர் நகர் அருகே உள்ள பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள காலி குடங்களுடன் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின்போது குடிநீர் விநியோகமானது உடனடியாக செய்து தரப்படும் என்று அதிகாரிகள் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட பின்னரே, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதனை கைவிட்டு சென்றனர். இதனால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.