அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை தாங்கினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மூச்சுத்திணறல் தான். அதனை சமாளிப்பதற்கு கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவைப்படும். இவை குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சப்ளை செய்து அவர்களை மூச்சுவிடும் சிரமத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவரும். தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒவ்வொரு படுக்கைக்கும் வெண்டிலெட்டர்களை வைத்து ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியாது.
மிகவும் அதிக பாதிப்பை ஏற்படும் நபர்களுக்கு மட்டுமே இந்த வசதியானது அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பாதிப்பு ஏற்படும் பெரும்பான்மையோருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதால், அனைவருக்கும் ஆக்சிஜன் சப்ளை செய்யும் விதமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில், இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 310 படுக்கைகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதில் அரியலூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 240 படுக்கைகளுக்கும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுக்கும் மட்டும் ஆக்ஸிஜன் இணைப்புக் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும்,
செந்துறை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுக்கும் உடையார்பாளையம் மருத்துவமனையில் 50 படுக்கைகளுக்கும் குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், அவசர உதவிக்காக வாரிய குடியிருப்பு பகுதிகளின் கட்டிடத்தில் 100 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.