Categories
உலக செய்திகள்

எங்களை நீங்க பயன்படுத்தக் கூடாது…. காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்…!!

அமேசானின் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமெரிக்க காவல்துறைக்கு ஒரு வருட காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது

முக அடையாளம் காணும் தொழில்நுட்பமான ஃபேஸ் ரெகக்னிஷன் டெக்னாலஜியை பயன்படுத்தி பொது இடங்களில் இருக்கும் குற்றவாளிகளை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காவல்துறையினர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். கருமையான தோல் நிறம் கொண்ட குற்றவாளிகளை தொழில்நுட்பம் மூலம் சரியாக கண்டறிவது கடினமானது என குற்றச்சாட்டுக்கள் பல வருடங்களாகவே இருந்து வருகின்றது.

அதோடு காவல்துறையினர் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறி பல நகரங்களில் இதனை காவல்துறையினர் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை ஐபிஎம் நிறுவனம் இந்த ஃபேஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பம் அதிக அளவிலான கண்காணிப்பிற்கும் இனரீதியான அடையாளம் காணலுக்கும் பயன்படுத்தப்படுவதால் இதிலிருந்து முழுவதுமாக விலக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமேசான் நிறுவனம் அமெரிக்க காவல் துறைக்கு ஃபேஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒரு வருடம் தடை விதித்துள்ளது. இந்த தடை எதற்காக என்பது குறித்து அமேசான் விளக்கம் அளிக்கவில்லை. அமேசான் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அமேசான் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் கைதேர்ந்த நிறுவனம் அல்ல. ஒரு சில மாகாண காவல் துறையினரை தவிர மற்றவர்கள் அமேசானின் இத்தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதில்லை.

எனவே இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என பல்கலைக்கழகத்தின் தனியுரிமை மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர் கார்வி தெரிவித்துள்ளார்.  இந்த தொழில்நுட்பமானது மக்களின் தனியுரிமையை மீறுவதால் இதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது. இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தை முற்றிலுமாக தடை செய்வது சரியான வழிமுறையாக இருக்காது என்றும், இதற்கென்று உரிய சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அமல்படுத்த வேண்டும் என்றும் பெரு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |