முக கவசம் அணிபவர்கள் போதிய தண்ணீர் குடிக்காததால் உடல்நலக் கோளாறுகள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனை, அலுவலகம், பொது இடங்கள் போன்றவற்றில் முக கவசம் அணியாமல் இருப்பது தொற்று பரவுவதை எளிதாக்கி விடும் என்பதால் பலரும் முக கவசம் அணிவதை பின்பற்றி வந்தனர். ஆனால் முக கவசம் அணிவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முழுநேரமும் முகக்கவசம் அணிந்து இருப்பதால் தாகம் எடுக்கும் பொழுது முக கவசத்தை அகற்ற வேண்டிய சூழல் உருவாகின்றது.
ஆனால் மருத்துவர்கள் தண்ணீர் குடிக்கும் போது முக கவசத்தை கழற்றிவிட்டு அணிந்து கொள்வது பாதுகாப்பற்றது என தெரிவிக்கின்றனர். அதே நேரம் உடலில் தண்ணீரின் அளவு உடலில் குறையாமல் இருக்க வேண்டும். எனவே சாதாரண தண்ணீருக்கு பதிலாக உப்பு கலந்த தண்ணீரை குடிக்க மருத்துவர்கள் சார்பாக பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோன்று உணவு உட்கொள்ளும் போதும் அதிக தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தொற்று பரவி வரும் காலத்தில் காய்ச்சல் வந்துவிட்டால் என்ன காய்ச்சல் என்று தேவையற்ற குழப்பம் ஏற்படும். அதே போன்று போதிய தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீர் அளவு உடலில் குறைவதோடு கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும். எனவே முகக் கவசம் அணிந்திருந்தாலும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றது.