தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் படுக்கைகளுடன் கூடிய புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் சீர்காழி புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய சிகிச்சை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்த சிகிச்சை மையத்தை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகரன், தருமபுர ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து பார்வையிட்டார். அந்த சமயத்தில் தருமபுர ஆதீன கல்லூரி முதல்வர் சாமிநாதன், ஆதீன அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.