வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாவட்டங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெங்காய விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் தோட்டக்கலை துறை வாயிலாக 50 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடந்தது. வெங்காய அறுவடை 2020 நவம்பர் முதல் துவங்கி நடந்து வருகிறது. இதனால் டிசம்பரில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரிகள் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடையை நீக்காத நிலையில் எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்காய விலை குறித்து மத்திய-மாநில அரசுகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.