சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது.
மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சிங்கபூருக்கு 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் தான், வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
இவருக்கு கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, வரும் 10-ஆம் தேதி அன்று சாங்கி சிறையில் நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. எனினும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக செயல்பாட்டாளர்களும், மனநல பாதிப்பால் தெரியாமல் செய்த தவறுக்காக அவரை மன்னித்து விடுமாறு பொதுமக்கள் 40 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி, அவர் தண்டனையை ரத்து செய்யக்கோரி சிங்கப்பூர் அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
உலகம் முழுக்க இந்த கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது. அதில் நாகேந்திரன் தெரிந்து தான் போதை பொருளை கடத்தியிருக்கிறார். அவருக்கு மனநிலை பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். இதனால் அவருக்கு தூக்கு தண்டனை கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.