தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால் பாமரமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 872 உயர்ந்து ரூ 33,848 க்கும் , கிராமுக்கு ரூ. 109 உயர்ந்து ரூ 4,231 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க வேண்டுமென்று ஏங்கி கொண்டு இருக்கும் பாமர மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கூறுகையில் ,கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் தீவிரம் அடைந்துள்ளது. நம் நாட்டில் 30க்கும் மேற்பட்டவர்கள் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி உலக நாடுகள் முழுவதும் கொரோனா பீதியில் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
ஏற்கனவே பொருளாதார மந்த நிலை மேலோங்கி இருப்பதனால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டு செல்வதால் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தங்கம் புதிய புதிய உச்சத்தை எட்டிக் கொண்டு இருப்பதால் திருமணத்திற்கு தங்கம் வாங்கும் நுகர்வோர்களுக்கு விலை உயர்வு தடையை ஏற்படுத்தும். மெதுவாக தங்கம் வாங்கி கொள்ளலாம் என்று பாமரமக்கள் நினைப்பார்கள் , தங்கம் வாங்குவதை தள்ளி வைப்பார்கள் . புதிய உச்சத்தை அடைந்த தங்கம் விலை சரியும் என்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக உயர்ந்த அளவுக்கு குறையாது பாமர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விலை ஏற்றம் தான் என்று அவர் தெரிவித்தார்.