அமெரிக்காவில் ஒரு பெண் உடல் முழுக்க முடி வளரும் ஒரு வகை ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னம்பிக்கை சிகரமாக வாழ்ந்துவருகிறார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த, ஜீன் ராபின்சன் என்ற 35 வயது பெண் தன்னையே வெறுத்து வாழ்ந்து வந்துள்ளார். காரணம், அவரின் 20 வயதில் உடல் மற்றும் முகங்களில் தேவையின்றி அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருக்கிறது. மருத்துவ பரிசோதனையில், அவரின் ஹார்மோன் சமமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது.
எனவே வாழ்வில் விரக்தியடைந்த அவர், தன்னையே வெறுத்திருக்கிறார். பொது இடங்களுக்கு போகாமல் இருந்துள்ளார். முடி அதிகமாக முகங்களில் வளர்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியே நாட்கள் செல்ல, ஒரு கட்டத்தில் தனக்குள் மன தைரியத்தை வரவைத்து, குறையை நிறையாக மாற்றிவிட்டார்.
அதாவது, தான் எப்படி இதிலிருந்து மீண்டேன் என்று இணையதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். மேலும் உடலில் வளரும் முடிகளை நீக்கும் வீடியோக்களையும் பதிவிட்டதால், இவரை இணையதளங்களில் பலர் பின்பற்ற தொடங்கியதோடு, ஆதரவும் அளிக்க தொடங்கினர். எனவே அதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார். தற்போது தன் பிரச்னையிலிருந்து மீண்டு அதனை ஏற்றுக்கொண்டு மகிழ்வுடன் வாழ பழகியதாக கூறியிருக்கிறார்.