முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மோசடி வழக்குகளுக்கான விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் ஆஜரானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி, அரசு துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அதன்பின்பு ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ராஜேந்திரபாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. அதன் பிறகு அவர் சிறையிலிருந்து விடுதலையானார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராக ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் இன்று ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.