சீனாவின் நவீன ஏவுகணை சோதனை கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இராணுவம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறையிலும் வளர்ச்சியடைந்த நாடு அமெரிக்கா. இதற்கு போட்டியாக தற்போது சீனாவும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் அமெரிக்காவை போல் சீனாவும் ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் நவீன ஹைபர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் மேலும் நவீனங்களை பொருத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சோதனை செய்தது. அதேபோல் கடந்த வாரமும் திடீரென்று ஒரு சோதனையை நடத்தியது. இதுகுறித்து சீனா கூறுகையில் “இந்த சோதனை ஏவுகணைகானது அல்ல. ஏவு வாகனத்தின் சோதனை ஆகும்” என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் சீனா நடத்திய இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நவீன ஹைபர் சோனிக் ஏவுகணையை சீனா சோதனை செய்தது கவலை அளிக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் ஹைபர் சோனிக் ஏவுகணையில் அணுகுண்டை பொருத்தி சீனாவிலிருந்து அமெரிக்காவை தாக்க முடியும் என்பதே ஆகும். இதனையடுத்து இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையை ரஷ்யாவும் வைத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ஹைபர் சோனிக் ஏவுகணையை உருவாக்கி சோதனைகளும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.