இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சொத்துகளின் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்திரட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் உள்ள நிலையில், அதை லாபகரமானதாக மாற்ற பல்வேறு திட்டங்களை அரசு தீட்டிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிர்வாக இயக்குநர் பி.கே. புர்வார், மும்பை, சென்னை, திருவனந்தபுரம், காசியாபாத் உள்ளிட்ட 14 பகுதிகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்தச் சொத்துகளின் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம், பி.எஸ்.என்.எல் தனது நிதிச்சுமையைக் குறைக்க மெகா விருப்ப ஒய்வுத் திட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப ஒய்வுத் திட்டத்தில் 80 ஆயிரம் ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மாதம் சுமார் 600 கோடி ரூபாய் மிச்சமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.