வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட முககவசங்களை அணிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2,900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை மருத்துவ ஊழியர்கள் மற்றும் கொரோனா தொற்று வாய்ப்பு இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணியலாம் என்றும், பொதுமக்கள் எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கும் நிலையில் பொதுமக்கள் வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.