தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 1 1/2 வருடத்தில் உதயநிதியை அமைச்சர் ஆக்கியதுதான் ஸ்டாலினின் சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என்று சொல்கிறாரோ அதைத்தான் செய்கிறார். கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி மதுக்கடைகளை மூடிய போது ஸ்டாலின் கொரோனா காலத்தில் மது கடைகளை திறந்தார். என்னுடைய மகன் மற்றும் மருமகன் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது படிப்படியாக அரசியலுக்கு கொண்டு வந்து உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இப்படி இருந்ததால் தான் அண்ணா திமுக கட்சியை ஆரம்பித்தார்.
ஆனால் தற்போது காங்கிரசை விட திமுக மோசமாகிவிட்டது. திமுக ஸ்டாலினின் குடும்ப சொத்தாகவே மாறிவிட்டது. கலைஞர் கூட ஸ்டாலினுக்கு இறுதி வரை பதவி கொடுக்காமல் வைத்திருந்தார். ஆனால் உதயநிதிக்கு வேகமாக பதவி கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், தற்போது வைகோ எதுவுமே பேசவில்லை. திமுகவின் கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டது. மேலும் திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை என்று கூறியுள்ளார்.