அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் காய்ச்சிய 20 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் மணிகண்டனை கைது செய்து மத்திய சிறையில்அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் என்பவர் சக்திவேல் மற்றும் மணிகண்டன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தால் மீண்டும் இது போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளரிடம் பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியாளர் ரத்னா, சக்திவேல் மற்றும் மணிகண்டனினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் மத்திய சிறையில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.