கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் விநாயகர் சிலையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள இடையன்சாத்து கிராமத்தில் காளியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் விநாயகர் சிலையை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.