நியூசிலாந்து அணி விலகியதை தொடர்ந்து , இங்கிலாந்தும் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார் .
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்த நிலையில் , போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தற்போது தொடரில் இருந்து விலகியதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது .இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமிஸ் ராஜா கூறும்போது, “நியூசிலாந்தை தொடர்ந்து இங்கிலாந்தும் தொடரில் இருந்து விலகி இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
ஆனால் இது நாங்கள் எதிர்பார்த்தது தான். நியூசிலாந்து அணி தொடரிலிருந்து விலகுவதாக சொன்ன போது எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என்பதைப் பற்றி எங்களிடம் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை போல தற்போது ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தானுக்கு வர தயக்கம் காட்டி வருகிறது. அந்த மூன்று அணியும் ஒரே மேற்கத்திய கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். டி20 உலகக் கோப்பை போட்டியை பொறுத்தவரை நாங்கள் ஒரு அணியை மட்டுமே (இந்திய அணி ) டார்கெட்டாக வைத்திருந்தோம்.தற்போது இந்தப் பட்டியலில் நியூசிலாந்து ,இங்கிலாந்து அணிகள் சேர்ந்துள்ளது.இவர்களை நாங்கள் மைதானத்தில் பழி தீர்ப்போம். “இவ்வாறு ரமீஸ் ராஜா காட்டமாக பேசியுள்ளார்.