Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதை வாங்கிட்டு வர சொல்றாங்க” 3 லட்சம் வரை பயிர்க்கடன்…. கவலை தெரிவித்த விவசாயிகள்….!!

பயிர்க்கடன் கிடைக்காமல் தவித்து வரும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்னர். 

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகிறது. இங்கு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் கொடுக்க கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற கூட்டுறவு வங்கிகள் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில் மற்ற வங்கிகளில் தடையில்லா சான்று பெற்றுவர நிர்பந்தம் செய்கிறது. மேலும் பிற வங்கிகளில் கணக்குகள் இல்லாதவர்கள் கூட கட்டாயமாக தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என கூறுவதாக தெரிகிறது. இதுகுறித்து குறிச்சியை சேர்ந்த கே.ஜி.பொன்னுச்சாமி என்ற விவசாயி கூறியபோது “ஒரு நபருக்கு பயிர்கடன் 2 லட்சமும், நகைக்கடன் 1 லட்சமும் என 3 லட்சம் வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் எங்களுடைய மொத்த சொத்துக்களுக்கும் உரிமை சான்று வாங்கி வரச்சொல்லி அலைக்கழிக்கிறார்கள். ஆகவே உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உண்மையான விவசாயிகள் பயன்பெற உதவ வேண்டும்” என்று அவர் கூறினார். இதனையடுத்து கன்னப்பள்ளியை சேர்ந்த விவசாயி மனோகரன் இதுகுறித்து கூறியபோது “வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மட்டுமே வரவு செலவு கணக்கு வைத்துள்ள எங்களைப்போன்ற விவசாயிகளை வட்டியில்லா பயிர்க்கடன் பெற அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்ற  வங்கிகளிலும் தடையில்லா சான்று பெற்று வர சொல்வது என்ன நியாயம் என்று கேட்டார். இவற்றில் மற்ற வங்கிகளில் எங்களுக்கு கணக்கு இருந்தால் மட்டுமே தடையில்லாச் சான்று வழங்குவார்கள். ஆனால் கணக்கு இல்லாத இடத்தில் தடையில்லா சான்று பெறுவதற்காக வங்கிக்கு தகுந்தவாறு பணம் வசூல் செய்கின்றனர்.

இதன் காரணமாக எங்களுக்கு வட்டிக்கு இணையாக செலவாகி விடுகிறது. ஆகவே ஒரு சில நிபந்தனைகளை தளர்த்தி விவசாயிகளுக்கு எளிமையாக பயிர்க்கடன் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்” என்று கூறினார். இதனைதொடர்ந்து விவசாயி கே.என்.சண்முகம் என்பவர் கூறியபோது “நகைக் கடனுக்காக கூட்டுறவு வங்கிகளுக்கு சென்றால் முறையாக ஆவணங்கள் இருந்தும் தட்டிக்கழிக்க பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். இதனிடையில் விவசாய பயிர்களுக்கு தேவையான காலங்களில் உரங்களை வழங்காமல் பின்பு கொடுப்பதால் என்ன பயன் இருக்கிறது. இவ்வாறு காலம் கடந்து கொடுக்கும் உரத்தை பெறவில்லை என்றாலும் அதற்கான மானியம் கிடைப்பதில்லை. இதற்கிடையில் விவசாயிகள் பயனடைய கூட்டுறவு வங்கிகளின் மூலமாக சலுகைகள் கொடுத்ததும் நாங்கள் அழைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது” என்று கவலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |