திருச்சியில் அத்தியாவசிய பொருள் வாங்கும் அடையாள அட்டை மே 3 வரை செல்லும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,204 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. திருச்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார்.
திருச்சியில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் நிற அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவர் இந்த அடையாள அட்டையை கொண்டு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம்.
பச்சை நிற அடையாள அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமை, நீல நிற செவ்வாய் மற்றும் வெள்ளி, மஞ்சள் நிற அடையாள அட்டை புதன் மற்றும் சனி வாரத்தில் என ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கிராமத்திற்கும் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த நடைமுறையை காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியவசிய பொருள் எடுத்துச் செல்ல வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மே 3 வரை செல்லும் என திருச்சி ஆட்சியர் தெரிவித்தார். ஏப்ரல் வரை வழங்கப்பட்ட அமையாள அட்டையை புதுபிக்க யாரும் வர வேண்டாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.